Monday, October 19, 2015

பசலைக்கீரையின் மருத்துவ குணங்கள்

உடல் நலத்தை பாதுகாக்கும் பசலைக்கீரையின் மருத்துவ குணங்கள்....
நமது சமையலுக்கு பசலைக்கீரையைப் பருப்புடன் சேர்த்து சமைப்பதால், அதற்குப் பருப்புக்கீரை என்றொரு பெயரும் உண்டு. இந்தக் கீரை நம் நாட்டில் பண்படுத்தப்பட்ட நிலங்களில் பரவலாகக் காணப்படும். கொடிப்பசலை, குத்துப்பசலை, வெள்ளைப்பசலை என, பசலைக்கீரையில் பல வகைகள் உள்ளன. நம் ஊரில் அதிகம் கிடைப்பது, குத்துப்பசலைதான்.

பசலைக்கீரையில் நார்ச்சத்து அதிக அளவிலும், மாவுச்சத்து குறைவாகவும் இருக்கிறது. உடல் எடை குறைக்க விரும்புபவர்களும், சர்க்கரை நோயாளிகளும் எண்ணெய் அதிகம் சேர்க்காமல், கடைசல் போல் செய்து சாப்பிடலாம்.உணவில் பசலைக்கீரையை அடிக்கடி சேர்த்துக்கொண்டால், மலச்சிக்கல் பிரச்னை நீங்கும். பசலைக்கீரையில் தண்ணீர் சேர்த்து வேகவைத்துச் சாப்பிடுவது காமாலை மற்றும் கல்லீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு மிகுந்த பலன் கொடுக்கும். 

பசலைக்கீரையை மோருடன் சேர்த்துச் சாப்பிட்டால், உடல் வலிமை அடையும். எனவே, சிறுவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் தாராளமாகச் சாப்பிடலாம். உடல் சூடு அதிகம் இருப்பவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், உடலில் சூடு குறைந்து, குளுமை பெறும். குடல் நோய்கள் வராது. பசலைக்கீரையின் தண்டுச்சாற்றை குழந்தைகளுக்குக் கொடுத்துவந்தால் ஜீரண சக்தி மேம்படும். சளி, நீர்க்கோவை போன்றவையும் சரியாகும்.

பசலைக்கீரையை வாரம் இருமுறை உணவில் சேர்த்துவந்தால், ரத்தசோகை வராது. நரம்பு மண்டலங்கள் சீராக இயங்கும். சர்க்கரை நோயாளிகளும், உடல் எடை குறைக்க விரும்புகிறவர்களும், சப்பாத்திக்குப் பசலைக்கீரைக் கூட்டு செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. பசலை இலைச்சாறு எடுத்து, கால் முதல் அரை ஆழாக்கு வரை நாள்தோறும் காலையும் மாலையும் சாப்பிட்டுவந்தால் உடலில் ஏற்படும், நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, எரிச்சல், சீதபேதி, ரத்தபேதி முதலான நோய்கள் குணமாகும்.

உடலின் உள் வெப்பம் காரணமாக ஏற்படும் தலைவலி நீங்க, பசலை இலையை நன்றாக அரைத்து, நெற்றியின் மீது பற்றுப் போடலாம். தலைவலி நீங்கும். அக்கி நோயால் அவதிப்படுபவர்கள், பசலை இலையை நன்றாக நசுக்கி அக்கியின் மீது தொடர்ந்து தடவி வந்தால், அக்கி குணமாகும். பசலை இலையையும் அதன் விதையையும் சேர்த்து நன்றாக அரைத்து, தீப்புண், வெந்நீரால் ஏற்பட்ட காயம், சொறி, சிரங்கு ஆகியவற்றின் மீது தடவினால், நல்ல பலன் கிடைக்கும். பசலைக் கீரையின் தண்டை அரைத்து, வேர்க்குரு, கை, கால்களில் ஏற்படும் தோல் எரிச்சலுக்குப் பற்று போடலாம்.

உடல் எடையை குறைக்கும் வெண்பூசணிக்காய் சாறு

 இயற்கை மருத்துவம்

தேவையான பொருட்கள்
பூசணிக்காய் - அரை கிலோ
தேன் - 2 தேக்கரண்டி
தண்ணீர் - 300 மி.லி.



செய்முறை :

• வெண்பூசணியின் மேல் தோலை நீக்கி விட்டு சிறுதுண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்து தண்ணீர் கலந்து வடிகட்டவும். • அதில் தேன் கலந்து பருக வேண்டும்.

இந்த பூசணி சாறு உடலில் உள்ள அமிலத்தன்மையை நீக்கும். உடல் சூட்டாலும், பித்தத்தாலும் உண்டாகும் வயிற்று புண், வாய்ப்புண், மூலம், சிறுநீர் சம்பந்தமான நோய்கள், பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் போன்றவைகளுக்கு சிறந்த மருந்து. இந்த சாறு ரத்தத்தில் காரத்தன்மையை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் தினமும் காலை 200 மி.லி. வெண்பூசணி சாறு பருகலாம். புற்றுநோய் சிகிச்சை மேற்கொள்பவர்கள் இந்த சாறு பருகினால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். உடல் சூடு குறையும்.

உடலில் உள்ள திசுக்கள் புத்துணர்ச்சி பெறும். சர்க்கரை நோயாளிகள் இந்த சாற்றில் உப்பு மற்றும் சீரகத்தூள் கலந்து பருக வேண்டும்.

ஜீரண சக்திக்கு சிறுகீரை.

ஜீரண சக்திக்கு சிறுகீரை.

தமிழ்நாட்டில் அதிக அளவில் தோட்டங்களிலும் வீட்டுத் தோட்டங்களிலும் வளர்க்கப்படுவது சிறுகீரை. தண்டு வகையைச் சேர்ந்த சிறுகீரைக்கு, ‘சில்லி’, ‘சிறிய கீரைத்தண்டு’ என வேறு பெயர்களும் இருக்கின்றன. நீளமான தண்டுகளைக் கொண்ட இந்தக் கீரையின் தண்டு, இலை இரண்டுமே மருத்துவப் பலன்கள் நிறைந்தவை.

சிறுகீரையைச் சாப்பிட்டுவந்தால், கண் பார்வைத்திறன் மேம்படும். கண் புகைச்சல், கண் காசம், கண்ணில் ஏற்படும் படலம், புண்கள் மற்றும் உடலில் வரக்கூடிய பித்தநோய்கள் குணமாகும்.

மலச்சிக்கல் பிரச்னை ஏற்பட்டால், செரிமானக் கோளாறுகள் உண்டாகும். மேலும், மூலம் உள்ளிட்ட பலவேறு பிரச்னைகளும் வரும். சிறு கீரையைச் சீராக உணவில் சேர்த்து வந்தால், அது மலச்சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கும். ஜீரண சக்தி மேம்படும்.

சிறுகீரையை உண்பதால், சிறுநீர் நன்றாகப் பிரியும். உடலில் நீர் கோத்து ஏற்படும் வீக்கம், நீர் எரிச்சல் போன்ற நோய்கள் குணமாகும். குரல் வளம் பெறும்.

சிறுகீரையை வேர் முதல் இலை வரை எடுத்து, மிளகுத் தூள், உப்பு, நெய் சேர்த்து அம்மியில் அரைத்துவைத்து, 5-10 கிராம் அளவுக்கு ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டால், நினைவுத்திறன் பெருகும்.

சிறுகீரையில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இதனைச் சீரான இடைவெளியில் சாப்பிட்டுவந்தால், எலும்புகள் பலமடையும். உடல் தளர்ச்சி நீங்கும்.

சிறுகீரையுடன் மஞ்சளை சிறிதளவு சேர்த்து அரைத்து, சொறி, சிரங்கு உள்ள இடங்களில் தடவிவர, நிவாரணம் கிடைக்கும்.

சிறுகீரையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரை நோயாளிகள், உடல் பருமனானவர்களுக்கு மிகவும் ஏற்றது.

சிறுகீரையுடன் மிளகைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டுவர, சரும நோய்கள் உண்டாகாது.

சிறுகீரையுடன் மஞ்சள், முந்திரிப் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, பருக்கள் மீது பூசினால், பருக்கள் மறையும்

Thursday, July 24, 2014

சாமைக் காரப் புட்டு

சிறுதானிய உணவு வகைகள் சாமைக் காரப் புட்டு ******************************* தேவையானவை: சாமை அரிசி மாவு - 500 கிராம், எண்ணெய் - 3 மேசைக்கரண்டி, கடுகு - சிறிதளவு, உளுந்து - ஒரு தேக்கரண்டி, கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி, சீரகம் - ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு, தக்காளி (பொடியாக நறுக்கியது) - 1, சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 250 கிராம், காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு. செய்முறை: சாமை அரிசி மாவைச் சலித்து, அதனுடன் சீரகம், சிறிது உப்பு கலந்து புட்டு பதத்துக்குப் பிசைந்து, ஐந்து நிமிடங்கள் ஊறவைத்து, ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிடவும். கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், மிளகாய், தக்காளி, உப்பு முறையே சேர்த்து, நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும். பின், வேகவைத்த சாமைப் புட்டைச் சேர்த்து நன்கு கலக்கவும். கொத்தமல்லியைத் தூவி இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் மூடி வேகவிட்டு எடுக்கவும். பலன்கள்: நீராவியில் வேகவைத்த உணவு என்பதால், உடலுக்கு நல்லது. விரைந்து செரிக்கும் தன்மை கொண்டது. காரம் சேர்ப்பதால், மேலும் சுவை அதிகமாகும்.

முளைக் கட்டிய பாசிப் பயறு இயற்கைக் கொழுக்கட்டை

முளைக் கட்டிய பாசிப் பயறு இயற்கைக் கொழுக்கட்டை தேவையான பொருட்கள்: முளைக்கட்டிய பாசிப் பயறு, துருவிய பச்சை மிளகாய், முள்ளங்கித் துருவல், முட்டைக் கோஸ் துருவல் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி கறிவேப்பிலை, உப்பு ஆகியவை, செய்முறை: முளைக்கட்டிய பாசிப் பயற்றை மிக்சியில் அல்லது ஆட்டுக்கல்லில் நன்றாக ஆட்டி எடுத்து மற்ற அனைத்தையும் அதனுடன் ஒன்றாக நன்றாகக் கலக்கி கொழுக்கட்டை வடிவில் பிடித்தால் சரி! தனியாகச் சாப்பிடலாம். விரும்பும் ஏதாவது ஒரு சட்னியுடன் சேர்த்தும் சாப்பிடலாம். இங்கு தக்காளி கொத்துமல்லிச் சட்னியும் தேங்காய்ச் சட்னியும் உள்ளது.... கொழுக்கட்டையில் சேர்க்கும் காய்கறிகளை நமது விருப்பம்போல மாற்றிக் கொள்ளலாம். (சமைக்க நினைத்தால் அப்படியே இட்லித் தட்டில் வைத்து வேகவைத்தால் போதும்)

கம்பு கொழுக்கட்டை

கம்பு வெஜிடபிள் கொழுக்கட்டை : காய்கறிச் சாம்பாருடன். தேவையான பொருட்கள்: நான்கு மணி நேரம் ஊறவைத்த கம்பு, நறுக்கிய கேரட், முள்ளங்கி , தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய்த் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி கறிவேப்பிலை, உப்பு ஆகியவை, செய்முறை: ஊறவைத்த கம்பை மிக்சியில் நன்றாக உலர் மாவாக அடித்து எடுத்து மற்ற அனைத்தையும் அதனுடன் ஒன்றாக நன்றாகக் கலக்கிக் கொழுக்கட்டை வடிவில் பிடித்து இட்லிப் பாத்திரத்தில் வைத்து வேகவைத்தால் தயார்! தனியாகச் சாப்பிடலாம். விரும்பும் ஏதாவது ஒரு சட்னியுடன் சேர்த்தும் சாப்பிடலாம். சாம்பாருடனும் சாப்பிடலாம். தாளித்த தயிரில் போட்டு தயிர்க் கொழுக்கட்டையாகவும் சாப்பிடலாம். இங்கு பாசிப்பருப்பு வெங்காய காய்கறிச் சாம்பார் உள்ளது. கொழுக்கட்டையிலும் சாம்பாரிலும் சேர்க்கும் காய்கறிகளை நமது விருப்பம்போல மாற்றிக் கொள்ளலாம்.

Wednesday, July 9, 2014

சோளம், ராகி,கம்பு இட்லி


தேவையானவை

ராகி 2 கிளாஸ்

சோளம் 1 கிளாஸ்

கம்பு குருணை 1 கிளாஸ்
 

இட்லி அரிசி 2 கிளாஸ்
 

உளுந்து 1 கிளாஸ்
 

வெந்தியம் சிறிது

ஊற வைக்கும்போது :

ராகி, சோளம் சுத்தம் செய்து தனி தனியாக சுமார் 6 மணி நேரம் ஊற வைக்கவும் .

இட்லி அரிசி , உளுந்து, வெந்தியம் வழக்கம் போல தனி தனியாக ஊற வைக்கவும்.

கம்பு குருணை மட்டும் சுமார் 1 மணி நேரம் ஊறினால் போதும் . (அதிக நேரம் ஊறினால் புளிப்பு ரொம்ப இருக்கும் மாவில்) அரைக்கும் போது :

உளுந்து வெந்தியம் முதலில் .. அரைத்து எடுத்து கொள்ளவும்

அடுத்து 15 நிமிடம் சோளம் , சோளம் 3/4 பதம் அறைந்ததும், ராகி ஒரு 10 நிமிடம்  கம்பு 10 நிமிடம் கடைசியாக இட்லி அரிசியும் சேர்த்து அரைத்து வழக்கம் போல உப்பு போட்டு கலந்து மாவை புளிக்க வைத்து இட்லி தயார் செய்யவும்.

அதிக நார் சத்து உடன் கூடிய, சுவையான இட்லி தயார்.